BREAKING NEWS

விஜய் பேசினால் இலங்கையே அதிருமாம்!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
விஜய் பேசினால் இலங்கையே அதிருமாம்!

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் முக்கிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திமுக மீதான கடுமையான விமர்சனங்களையும், நடிகர் விஜய்யின் அரசியல் செல்வாக்கு குறித்த பெருமிதங்களையும் முன்வைத்துள்ளார்.

“கட்சத்தீவை மீட்போம் என்று ஸ்டாலின், வைகோ, எடப்பாடி பழனிசாமி எனப் பலரும் பேசுகிறார்கள். ஆனால், என் தலைவர் விஜய் ஒரு வார்த்தை சொன்னதும் இலங்கையில் பூகம்பம் ஏற்படுகிறது. உடனே வெளியுறவுத்துறை அமைச்சர் இது குறித்துக் கேள்வி எழுப்புகிறார். என் தலைவர் பேசினால் இலங்கையே அதிர்கிறது,” என அவர் குறிப்பிட்டார்.

“திமுக என்ற கட்சி தற்போது நவீன ரக ஒட்டுண்ணிகளின் கொள்ளிடமாக மாறிவிட்டது. கட்சிக்காக உழைத்தவர்களைத் தூக்கியெறிந்து விட்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால் அக்கட்சியை ‘அண்ணா திமுக 2’ என்று தாராளமாக மாற்றிக்கொள்ளலாம்,” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

“எனது 39 ஆண்டுகால அரசியலில் எந்தவொரு கட்சியும் ஒரு பெண்ணை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால், முதன்முறையாக ராணி வேலுநாச்சியாரை கொள்கை தலைவராக முன்னிறுத்தியது விஜய் தான். மதுரை மேம்பாலத்திற்கு ராணி வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படக் காரணமாக இருந்ததும் வருங்கால முதலமைச்சர் விஜய் தான்,” என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கை விஜய் என்றும், அவரால்தான் தமிழகத்தில் உண்மையான சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியும் என்றும் நாஞ்சில் சம்பத் வலியுறுத்தினார்.