BREAKING NEWS

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள்: ஈரான் உட்பட பல நாடுகளில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள்

PR
priya priya punidha in Latest Updates
Report
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள்: ஈரான் உட்பட பல நாடுகளில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள்

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியதில் இருந்து ஈரானின் 131 நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஈரானின் சிறுமிகளுக்கான ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 165 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒன்பது வைத்தியசாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், தாக்குதல்களில் பல நோயாளிகள் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பேகி தெரிவித்துள்ளார்.

ஈரானில் சீனப் பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானின் பதிலடித் தாக்குதல்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

பஹ்ரைனின் சல்மான் தொழில் நகரத்தில் வெளிநாட்டு கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குவைத்தில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.