இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷானக்கவின் நிதானமான விளையாட்டுத் தர்மத்தை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
பரபரப்பான போட்டியின் இறுதி ஓவரில், வெற்றிக்கு 27 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஷஹீன் ஷா அப்ரிடி பந்துவீசினார். அப்போது வீசப்பட்ட பந்து ‘வைட்’ (Wide) என வர்ணனையாளர்கள் அனைவரும் கருதினர். ஆனால், 22 ஓட்டங்களுடன் களத்தில் இருந்த ஷானக்க, அது குறித்து நடுவரிடம் எவ்வித முறையீடோ அல்லது அதிருப்தியோ காட்டாமல் அமைதி காத்தார்.
பொதுவாக இத்தகைய இக்கட்டான சூழலில் வீரர்கள் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துவது வழக்கமாக இருக்கும்போது, ஷானக்கவின் இந்தச் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள ரமீஸ் ராஜா, ஷானக்கவின் இந்தச் செயலை “விளையாட்டுத் தர்மத்தின் நவீன கால மண்டேலா” (Modern day Mandela of sportsmanship) என்று வர்ணித்துள்ளார். விளையாட்டின் உண்மையான உணர்வை (Spirit of the game) ஷானக்கவின் இந்த நடத்தை மிகச்சரியாகப் பிரதிபலிப்பதாக அவர் மேலும் பாராட்டியுள்ளார்.
