2026 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) நடத்திய ஆய்வில், மது அருந்தியவர்களால் பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அதிர்ச்சிகரமான விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நாட்டின் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 1,157 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
பொது இடங்களில் மதுபோதையில் இருப்பவர்களால் தமக்கு பாதுகாப்பு இல்லை என 71% பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகம் பாதிக்கப்படும் இடங்கள்: பொதுப் போக்குவரத்து (பேருந்து/தொடருந்து) – 77%, வீதிகள் – 43.7% மற்றும் பேருந்து/தொடருந்து நிலையங்கள் – 43% எனப் பெண்கள் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
வாய்மொழித் துன்புறுத்தல் (55.4%), பின் தொடருதல் அல்லது உற்று நோக்கல் (48.8%) மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் (36%) ஆகியன பிரதானமாக உள்ளன.
துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது, அச்சம் மற்றும் அவமானம் காரணமாகப் பெண்கள் எதிர்ப்பு காட்டாமல், பயணங்களைத் தவிர்த்தல் அல்லது பயண நேரங்களை மாற்றியமைத்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றனர்.
மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க, அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 98.4% பெண்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக:
மதுப்பொருள் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்துதல்.
பொலிஸ் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல்.
தேசிய மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகாரசபை (NATA) சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துதல்.
பெண்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் மிகக் குறைவாக (1.2%) இருந்தபோதிலும், மது பாவனையாளர்களால் பெண்களுக்கு ஏற்படும் சமூகப் பாதிப்புகள் பாரதூரமானதாக இருப்பதாக இந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.