ஈரானின் மறைந்த தலைவர் கமேனிக்கு அடுத்ததாகப் பதவியேற்கும் எவரையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஈரானிய ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் அவரது அறிக்கை அமைந்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இஸ்ரேல் காட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“இஸ்ரேலை அழிக்கும் திட்டத்தைத் தொடரவும், அமெரிக்கா மற்றும் சுதந்திர நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கவும், பிராந்திய நாடுகளைப் பயமுறுத்தவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் எந்தவொரு தலைவரும் எமது நேரடி இலக்காக இருப்பார்.”
மேலும், ஈரானின் புதிய தலைவராக வருபவர் யாராக இருந்தாலும், அவர் எந்தப் பெயரைக் கொண்டிருந்தாலும் அல்லது எங்கே மறைந்திருந்தாலும் அவரைத் தேடிப்பிடித்து அழிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இராணுவக் கட்டமைப்புகளை அழிப்பதற்கும், அந்நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்குமான சூழலை உருவாக்குவதற்கும் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தொடர்ந்து செயற்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்கனவே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த நேரடி மிரட்டல் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.