BREAKING NEWS

இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை!

DH
dhusanthi dhusi in Latest Updates
Report
இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான போர்ச் சூழல், இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதனை நிர்வகிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

“எதிர்காலச் சூழல்களை முன்கூட்டியே கணிப்பது சவாலானதாக இருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்” என்று ஜனாதிபதி இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு: தற்போதைய கையிருப்பு போதுமானதாக இருப்பினும், எதிர்கால நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தேவையான மேலதிக கையிருப்பு மற்றும் உலக சந்தை விலை மாற்றங்களை முகாமைத்துவம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எரிவாயு சேமிப்புத் தொடர்பான சிக்கல்களுக்குக் குறுகிய காலத் தீர்வுகளைத் தேடப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து: சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், இலங்கையுடன் நீண்டகாலமாக இணைந்துள்ள கப்பல் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு: நாட்டில் தற்போது போதுமான அளவு உணவு கையிருப்பில் உள்ளது. எதிர்கால நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறை: சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் விமானப் போக்குவரத்துத் தொடர்ச்சியை உறுதிப்படுத்த மாற்று வழிகள் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போதுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் முதலீடு: முதலீட்டு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும், தரவு மையங்கள் (Data Centres) போன்ற புதிய தொழில்நுட்ப முதலீடுகளை ஊக்குவிக்கச் சலுகைப் பொதிகளை (Package) உருவாக்கவும் நிதி அமைச்சிற்குப் பணிப்புரை வழங்கப்பட்டது. இது குறித்த விடயங்களை டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரியவின் தலைமையில் ஆராயத் தீர்மானிக்கப்பட்டது.

நிதி, திட்டமிடல், வர்த்தகம், துறைமுகங்கள், சிவில் விமான சேவை மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இக்கட்டான காலப்பகுதியிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.