டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) முன்னெடுக்கவிருந்த போராட்டத்திற்கு ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி உயிர்மாய்ப்புச் செய்து கொண்ட ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரின் உடல், கிளங்கன் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, வைத்தியசாலையில் பணிபுரியும் மூவர் அந்த உடலுக்கு அவமரியாதை செய்ததாகப் முறைப்பாடு எழுந்தது. இந்தச் சம்பவம் மலையக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர்கள் மீது வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரியும், குற்றவாளிகளைப் பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (08) அமைதிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது.
நோர்வூட் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஹட்டன் நீதவான் தமயந்தி பெர்னான்டோ, இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டார். வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
