நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி, இன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சட்டத்தரணி றியாஸ் ஆதம் வசமானது.
முன்னாள் தவிசாளரின் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப இரண்டு முறை கூட்டப்பட்ட சபையமர்வுகளிலும் , போதிய உறுப்பினர்களின் வருகை இல்லாததால் தள்ளிப்போயின. இதனால் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாமல் சபையின் நிர்வாக நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
இன்று (09) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். அஸ்மி தலைமையில் நடைபெற்ற விசேட அமர்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 06 உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சுலைமான் சாபி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் மூலம் கோரம் பூர்த்தியான நிலையில், சட்டத்தரணி றியாஸ் ஆதம் புதிய தவிசாளராக அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டார்.
முன்னதாக நடைபெற்ற அமர்வுகளைப் புறக்கணித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதால், இனி சபையின் நிர்வாகப் பணிகள் சீராக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர் உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.