BREAKING NEWS

இலங்கையின் நிலைப்பாட்டிற்கு சுவிஸ் தூதுவர் பாராட்டு: ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு.

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
இலங்கையின் நிலைப்பாட்டிற்கு சுவிஸ் தூதுவர் பாராட்டு: ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிஹ்ரி வால்ட் (Dr. Siri Walt) மற்றும் ஜனாதிபதி தலைமை அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கின் தற்போதைய போர் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு, சுவிஸ் தூதுவர் கலாநிதி சிஹ்ரி வால்ட் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி, இலங்கையின் இளைஞர் தொழில் பயிற்சி மற்றும் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு ஆகியவற்றிற்கு சுவிட்சர்லாந்து வழங்கி வரும் பங்களிப்பிற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனத் தூதுவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் (Justine Boillat) கலந்துகொண்டிருந்தார்.