இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) சேவையை வலுப்படுத்தும் நோக்கில், புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட 199 சாரதிகள் மற்றும் 342 நடத்துநர்கள் என மொத்தம் 541 பேருக்கு நியமனக் கடிதங்கள் இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.


இ.போ.சபையில் நிலவிய அரசியல் தலையீடுகளை நீக்கி, மக்களுக்குச் சுமையற்ற, செயல்திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு.
தற்போதுள்ள 7,130 பஸ்களில் 70%-க்கும் அதிகமானவை 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இவற்றை படிப்படியாக நீக்கி, தரமான புதிய பஸ்களைச் சேவையில் இணைக்கும் தேசியக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் இந்த மாதம் 08 புதிய பஸ்கள் கிடைக்கவுள்ளன. மேலும், ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் புதிய பஸ் தொகுதிகள் சேவையில் இணைக்கப்படும்.
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் பயணச் செலவைக் குறைக்கவும், வாகன இறக்குமதிக்கான அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், நகர நெரிசலைக் கட்டுப்படுத்தவும் முடியும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இ.போ.சபையை இலாப-நட்டக் கணக்காகப் பார்க்காமல், சேவை நோக்குடன் வலுவான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
