மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ‘பொருளாதாரக் கண்காணிப்புக் குழு’ நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை ஒரு சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்பதால், வெளிப்புற அழுத்தங்களில் இருந்து பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான பின்வரும் அம்சங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது:
போர்ச் சூழலினால் எரிபொருள் இறக்குமதி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் வர்த்தகத் தொடர்புகளுக்கு ஏற்படக்கூடிய சவால்கள்.
உலகளாவிய விலையேற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியில் உள்நாட்டுச் சந்தையை ஸ்திரப்படுத்தல்.
பொருளாதார அதிர்வுகளால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான துரித நடவடிக்கைகள்.
அந்நியச் செலாவணி மற்றும் முதலீடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
வெளிப்புற பொருளாதார அதிர்வுகளில் இருந்து இலங்கையைப் பாதுகாத்து, பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கான கொள்கை ரீதியான தீர்மானங்களை இக்குழு தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளது.
