அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலி காணொளிகளை கண்டறிந்து அகற்றுவதற்கான புதிய இலவசத் தொழில்நுட்பத்தை யூடியூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet), ‘டீப்ஃபேக்’ எனப்படும் மிகவும் தத்ரூபமான ஏஐ காணொளிகளால் ஏற்படக்கூடிய மோசடிகள் மற்றும் தவறான தகவல்களைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக, பொது விவாதங்களில் முக்கியப் பங்காற்றும் நபர்களின் உருவத்தைப் போலியாகப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொளிகளை இது துல்லியமாகக் கண்டறியும்.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்களின் ஒரு காணொளியையும் , அரச அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும்.
யாராவது இவர்களின் உருவத்தைப் பயன்படுத்தி ஏஐ காணொளிகளைப் பதிவேற்றினால், யூடியூப் ஸ்டுடியோ (YouTube Studio) ஊடாக சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியாக அறிவித்தல் (Notification) அனுப்பப்படும்.
அந்த காணொளி போலியானது என்பதை உறுதிப்படுத்திய பின், அதனைத் தளத்திலிருந்து அகற்றுமாறு பயனர்கள் கோரிக்கை விடுக்க முடியும்.
பயனர்கள் வழங்கும் இந்தத் தரவுகள் கூகுளின் ஏஐ மாதிரிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும், இது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் யூடியூப் உறுதி அளித்துள்ளது.
தற்போது குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த வசதியை, வரும் ஆண்டுகளில் இன்னும் விரிவுபடுத்த யூடியூப் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இணையதள மோசடிகள் மற்றும் போலிச் செய்திகளின் பரவலைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.