BREAKING NEWS

நயினாதீவில் குடிநீர் நெருக்கடி: நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டார் எம்.பி. ரஜீவன்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
நயினாதீவில் குடிநீர் நெருக்கடி: நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டார் எம்.பி. ரஜீவன்!

நயினாதீவு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்று (11) நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டார்.

குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்த போது, அங்கிருந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனால், சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் நீர் குடிப்பதற்கு தகுதியற்ற முறையில், உவர் நீராக (உப்புத் தன்மை) காணப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் அவதானித்தார்.

அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இயந்திரக் கோளாறுகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்த விஜயத்தின் போது, நயினாதீவு பிரதேச சபை உறுப்பினர் வினோத் ஆசிரியரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனுடன் இணைந்திருந்ததோடு, அப்பகுதி மக்களின் மேலதிக குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்டுள்ள இயந்திரங்களை விரைவாகப் புனரமைத்து, மக்களுக்குத் தூய்மையான குடிநீரை வழங்குவதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை உரிய தரப்பினருடன் கலந்துரையாடி முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார்.