BREAKING NEWS

பியகமவில் பாரிய டீசல் கடத்தல் முறியடிப்பு: 19,060 லீற்றர் எரிபொருளுடன் 4 பேர் கைது!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
பியகமவில் பாரிய டீசல் கடத்தல் முறியடிப்பு: 19,060 லீற்றர் எரிபொருளுடன் 4 பேர் கைது!

பியகம பகுதியில் இரகசியமான முறையில் பாரிய அளவிலான டீசலைச் சேகரித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த குழு ஒன்றை களனி பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றிரவு அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வீதிகளில் பயணிக்கும் லொறிகள் மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகளுக்குப் பணம் கொடுத்து, அவர்களது வாகன கொள்கலனிலிருந்து டீசலைத் திருடிச் சேகரித்து வந்துள்ளனர். இதற்காக மோட்டார் பொருத்தப்பட்ட விசேட குழாய்களைப் பயன்படுத்திய அவர்கள், அவ்வாறு உறிஞ்சப்படும் எரிபொருளைப் பெரிய பவுசர்களில் (Bowsers) நிரப்பி இரகசியமாக விற்பனை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

இந்தச் சோதனையின் போது 19,060 லீற்றர் டீசல் நிரப்பப்பட்ட இரண்டு பவுசர்கள் , எரிபொருளை உறிஞ்சப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் குழாய்கள் மற்றும் 16 பீப்பாய்களை பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 3,81,000 ரூபா ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹெய்யந்துடுவ, திஹகொட மற்றும் நெலும்தெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 42 வயதுடைய நான்கு பேர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.