இலங்கையில் போக்குவரத்து வசதிகள் அற்ற பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, ‘சிசு செரிய’ (Sisu Seriya) திட்டத்தை வலுப்படுத்த 200 புதிய பேருந்துகளைச் சேவையில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாடசாலை போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவதற்காக இந்த ஆண்டு மட்டும் ஒரு பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சுக்கள் இணைந்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாக இந்த தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
பெரிய பேருந்துகள் செல்ல முடியாத குறுகிய மற்றும் கடினமான வீதிகளைக் கொண்ட கிராமப்புற மாணவர்களுக்காக, விசேட வேன் (Van) சேவைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பேருந்துகளும் GPS தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும்.
30 வயதிற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படும்.
குளிரூட்டப்பட்ட பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கும் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நாடளாவிய ரீதியில் 1,620 ‘சிசு செரிய’ சேவைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் 50 சதவீதக் கட்டணச் சலுகையில் பயணிக்கின்றனர். புதிய பேருந்துகளின் வருகையுடன் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவுள்ளது.
பாடசாலை அதிபர்கள் ஊடாக இலங்கை போக்குவரத்துச் சபை அல்லது மாகாண போக்குவரத்து அதிகார சபையிடம் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம், தகுதியுள்ள பாடசாலைகளுக்குப் புதிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.