BREAKING NEWS

இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி தலைமையில் அவசர ஆலோசனை!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி தலைமையில் அவசர ஆலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலால் இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சவால்களை முறியடிப்பது குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பொருளாதார கண்காணிப்புக் குழு நேற்று (12) கூடி விரிவாக ஆராய்ந்தது.

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள பின்வரும் வெளிப்புற அழுத்தங்கள் குறித்து இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது:

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு.

கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படுதல்.

அத்தியாவசியப் பொருட்களின் வரத்து மற்றும் விலையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்.

இந்நாட்டுச் சந்தை நிலவரத்தை ஸ்திரப்படுத்தவும், உலகளாவிய நெருக்கடிகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மேலும், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் துறைமுகங்கள், பெற்றோலியம், ஏற்றுமதி, சுற்றுலா ஆகிய துறைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.