BREAKING NEWS

திருகோணமலையில் ஊழல் வேட்டை: இலஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரிகள் சிக்கினர்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
திருகோணமலையில் ஊழல் வேட்டை: இலஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரிகள் சிக்கினர்!

சுற்றுலா உணவகம் ஒன்றிற்குத் தீயணைப்பு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட இருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாய் நகரில் அமைந்துள்ள சுற்றுலா உணவகம் ஒன்றிற்கு 2026 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக, அங்கிருந்த அதிகாரிகள் 40,000 ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளனர். நீண்ட பேரம் பேசுதலுக்குப் பின் அந்தத் தொகை 35,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இலஞ்சப் பணத்தில் 10,000 ரூபாயை வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறும், மீதி 25,000 ரூபாயைப் பணமாக நேரில் தருமாறும் அதிகாரிகள் உணவக உரிமையாளரை நிர்ப்பந்தித்துள்ளனர். இது குறித்து உரிமையாளர் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதியாக 20,000 ரூபாயைப் பெற்றுக்கொண்ட போது, தீயணைப்பு அதிகாரி மற்றும் ஒரு தீயணைப்பு வீரர் ஆகிய இருவரும் திருகோணமலையில் வைத்து கையும் மெய்யுமாகச் சிக்கினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.