உலக சந்தையில் விமான எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ளதால், இலங்கையில் விமான பயணச்சீட்டுகளின் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, விமான எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மேலாண் பணிப்பாளர் கலாநிதி மயூரா நெத்திகுமாரகே கருத்து தெரிவிக்கையில்,
“இந்த மாத தொடக்கத்தில் 93.57 டொலராக இருந்த ஒரு பீப்பாய் விமான எரிபொருள், தற்போது 209 டொலராக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த 100% க்கும் அதிகமான விலை உயர்வு மற்றும் விமானங்கள் ஒருவழிப் பயணத்தை மட்டும் மேற்கொண்டுவிட்டு வெறுமையாகத் திரும்ப வேண்டிய நிலையும் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், ஏற்கனவே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்த (Pre-booked) பயணிகளை இந்த விலை உயர்வு பாதிக்காது என பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். அவர்கள் மேலதிகக் கட்டணம் எதுவுமின்றித் திட்டமிட்டபடி பயணிக்க முடியும்.