இலங்கையில் அரசாங்கக் கொள்முதல் நடைமுறைகளில் பாரிய ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவும், அதனைத் தடுக்க புதிய ‘கொள்முதல் சட்டத்தை’ உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
பஃப்ரல் (PAFFREL) அமைப்பு நடத்திய கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, புதிய கொள்முதல் சட்டத்தைக் கொண்டு வருவது கட்டாயமாகும் எனச் சுட்டிக்காட்டினார். அரசாங்கக் கொள்முதல் மூலமே அதிகப்படியான மக்கள் பணம் ஊழல் செய்யப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.சட்டத்தின் ஆட்சி இன்று கேலிக்கூத்தாகியுள்ளதாகத் தெரிவித்த அவர்,
“அரசாங்கத்தில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் வந்தாலும் அவர்கள் தப்பி விடுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினர் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். நீதி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் IMF ஒப்பந்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மாற்றியமைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ளதாக அவர் தனது உரையில் சாடினார்.