ஈரான் தரப்பு, பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டினாலும், இப்போதைக்கு அவர்களுடன் உடன்படிக்கை செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்த தொலைபேசி பேட்டியில் அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.
ஈரான் ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது. ஆனால் தற்போதைய நிபந்தனைகள் போதுமானதாக இல்லை என்பதால், நான் இப்போதைக்கு அதற்குத் தயாராக இல்லை.
புதிய ஒப்பந்தம் எதுவாக இருந்தாலும், ஈரான் தனது அணுவாயுதக் கனவுகளை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்பதே முதன்மை நிபந்தனையாக இருக்கும்.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா “முழுமையாகத் தகர்த்துவிட்டது” என்றும் ட்ரம்ப் கூறினார்.
மேலும், இன்னும் சில முறை அங்கே தாக்குதல் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதில் பல நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளதாக குறிப்பிட்ட ட்ரம்ப் அந்த நாடுகளின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார்.
மேலும் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வது குறித்த அச்சத்தை அவர் நிராகரித்தார்.
“தேவையான அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளது. தற்போது விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிறு தங்குதடை விரைவில் சரி செய்யப்படும்,” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.