BREAKING NEWS

தமிழ் மக்கள் சீனர்களின் எதிரிகள் இல்லை

PR
priya priya punidha in Latest Updates
Report
தமிழ் மக்கள் சீனர்களின் எதிரிகள் இல்லை

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சீன சுற்றுலாப் பயணிகளை அங்கு ஈர்க்கவும் சீனா மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ் மக்கள் சீனர்களுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு பிம்பம் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நான் பலமுறை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சென்றுள்ளேன். அங்கு வாழும் மக்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் விருந்தோம்பல் பண்பு மிக்கவர்கள் என்பதை நேரில் கண்டேன். 

இவ்வாறான வரலாற்று ரீதியான அச்சங்கள் மற்றும் தவறான அபிப்பிராயங்கள் மாற்றப்பட வேண்டும். மக்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டால் பல விடயங்களை எளிதாகச் சாதிக்க முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகச் சீனா 1,200 மில்லியன் ரூபாவை (120 கோடி) ஒதுக்கியுள்ளது. 

இதன் மூலம் வீட்டுத்திட்டங்கள், மீன்பிடி வலைகள் வழங்கல் மற்றும் உலர் உணவுப் பொதிகள் விநியோகம் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படும். வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் இப்பகுதிகளில் விசேட உணவு விநியோகத் திட்டங்களைச் செயற்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

இந்தியா, சீனா மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒரு ‘முத்தரப்பு ஒத்துழைப்புத் தளத்தை’ உருவாக்க வேண்டும்.

அண்மைக்காலமாக இந்தியா, சீன முதலீடுகள் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவது பிராந்திய வளர்ச்சிக்குச் சாதகமான விடயமாகும்.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 7.2 பில்லியன் டொலர்களை எட்டியிருப்பது பாராட்டுக்குரியது. எனினும், வெறும் விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காமல், கைத்தொழில் துறையைப் பலப்படுத்தினால் மட்டுமே நிலையான வருமானத்தை உருவாக்க முடியும்.

முதலீட்டாளர்களை ஈர்க்க ‘ஒற்றைச் சாளர முறைமை’யை இலங்கை வினைத்திறனாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கையில் சீனா முன்னெடுக்கும் பல பணிகள் ஊடகங்களில் போதியளவு வெளிவருவதில்லை. 14 புதிய பாலங்களை நிர்மாணித்தல், 100 மின்சாரப் பேருந்துகளை நன்கொடையாக வழங்குதல் மற்றும் கடந்த நான்கு வருடங்களாக 15 மில்லியன் டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைத் துணிகளை வழங்குதல் போன்றவற்றைச் சீனா செய்து வருகிறது. அத்துடன், இலவசக் கண் சிகிச்சை முகாம்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான விசேட மருத்துவ வாகனத்தையும் சீனா வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பெறுமதி 6.2 பில்லியன் அமெரிக்க டொலராகும். இதில் இலங்கையின் ஏற்றுமதி வெறும் 300 மில்லியன் டொலர் மட்டுமே. இந்தப் பாரிய வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கச் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அவசியமானது.

சீனப் பொருள்கள் சந்தையை ஆக்கிரமித்துவிடும் என்ற வீணான அச்சத்தைக் கைவிட்டு, இந்த உடன்படிக்கையை முன்னெடுப்பது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்று சீனத் தூதுவர்  சுட்டிக்காட்டினார்.