யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமான பழைய பூங்கா (Old Park) வளாகத்தினுள் உள்ளரங்கு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு யாழ். மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி மாவட்ட நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தீர்ப்பை ரத்து செய்து இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் 170 மில்லியன் ரூபா செலவில் இந்த உள்ளரங்கு விளையாட்டு அரங்கம் திட்டமிடப்பட்டது. எனினும், இப்பகுதியானது 1853-ஆம் ஆண்டு பிரித்தானிய நிர்வாகி சேர் பேர்சிவல் அக்லண்ட் டைக் அவர்களால் வழங்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறக்கட்டளைச் சொத்து என மனுதாரர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இந்த மனு தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை கட்டுமானப் பணிகள் எதனையும் முன்னெடுக்கக் கூடாது என மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது குறித்த ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு அரச தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் மாதம் 30-ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்தத் தீர்ப்பானது யாழ்ப்பாணத்தின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்கப் போராடும் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.