ஈரானில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடிப்பதைத் தடுக்க அந்நாட்டு அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தலைநகர் டெஹ்ரான் முழுவதும் புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டு மக்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த மார்ச் 11-ஆம் திகதி டெஹ்ரானில் உள்ள நான்கு முக்கிய பாதுகாப்புச் சாவடிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஈரானிய பாதுகாப்புப் படையினர் பலர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ட்ரோன் (Drone) தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக மேம்பாலங்களுக்கு அடியிலும், சுரங்கப்பாதைகளுக்குள்ளும் ரகசிய சோதனைச் சாவடிகளை ஈரான் அமைத்துள்ளது.
மக்கள் வீதிக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், மொபைல் போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவதுடன், வீதிகளில் செல்பவர்கள் கடும் தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்த நேரடி மோதல் போக்கு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.