அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் நிலவும் கப்பல் போக்குவரத்து முடக்கத்தை உடைக்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேரடியாகக் களமிறங்கியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிப்பது குறித்து ஈரானிய அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் முதற்கட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. “ஈரானுடன் நான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் சில நல்ல பலன்களைத் தந்துள்ளன” என அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, சனிக்கிழமையன்று இந்தியாவின் இரண்டு எரிவாயு கப்பல்கள் அந்தப் பாதையைக் கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணை என்பது இந்தியாவின் உயிர்நாடி போன்றது. நாட்டின் 50% கச்சா எண்ணெய் மற்றும் பெரும் பகுதி சமையல் எரிவாயு (LPG) இந்த வழியாகவே இறக்குமதி செய்யப்படுகிறது. போர் காரணமாக இந்தப் பாதை முடங்கியுள்ளதால், இந்தியாவில் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்து சிலிண்டர்களைச் சேமிக்கத் தொடங்கியுள்ளதுடன், பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மறுபுறம், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 106 டொலராக உயர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பாதையைத் திறக்கப் போர்க்கப்பல்களை அனுப்பத் திட்டமிட்டு வரும் நிலையில், இந்தியா மிகவும் நிதானமாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயன்று வருகிறது. இன்னும் 22 இந்தியக் கப்பல்கள் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.