ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த நிறுவனங்கள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து விலகிக்கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கடந்த புதன்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிறைவேற்று ஆணையின் மூலம், இந்த அமைப்புகள், முகவர் நிலையங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ஆதரவு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவில் ஐநா மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஐநா ஒப்பந்தம் (UNFCCC) போன்ற முக்கிய அமைப்புகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சர்வதேச அமைப்புகளுக்கு அமெரிக்கா வழங்கும் பங்களிப்பு மற்றும் நிதி குறித்து மேற்கொள்ளப்பட்ட விரிவான மதிப்பாய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றத்திற்கான காரணங்கள்: காலநிலை, தொழிலாளர் உரிமைகள், இடம்பெயர்வு மற்றும் பிற சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இந்த அமைப்புகளை “தேவையற்றவை” அல்லது “திறமையற்றவை” என ட்ரம்ப் நிர்வாகம் வகைப்படுத்தியுள்ளது. இந்த அமைப்புகள் தவறாக நிர்வகிக்கப்படுவதாகவும், அமெரிக்காவின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் செழிப்புக்கு அச்சுறுத்தலாக சில தரப்பினரின் தனிப்பட்ட நலன்களுக்காகச் செயல்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு (WHO), யுனெஸ்கோ (UNESCO), ஐநா மனித உரிமைகள் பேரவை மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு (UNRWA) ஆகியவற்றிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்களும் தாக்கங்களும்: இந்த முடிவு சர்வதேச ஆய்வாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அமெரிக்காவின் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே சர்வதேச ஒத்துழைப்பை பேணுவதற்கான முயற்சி இது” என சர்வதேச நெருக்கடிகள் குழுவின் (International Crisis Group) டேனியல் போர்டி தெரிவித்துள்ளார். இதனால் ஐநா சபை தனது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் திட்டங்கள் முடங்கவும் வாய்ப்புள்ளது.
முன்னாள் வெள்ளை மாளிகை காலநிலை ஆலோசகர் ஜினா மெக்கார்த்தி இந்த நடவடிக்கையை “தொலைநோக்கற்ற மற்றும் வெட்கக்கேடான” முடிவு என வர்ணித்துள்ளார். அமெரிக்கா போன்ற பெரும் பொருளாதாரம் கொண்ட நாடு காலநிலை ஒப்பந்தங்களிலிருந்து விலகுவது, பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சிகளைப் பலவீனப்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
எதிர்காலத் திட்டம்: இருப்பினும், வரி செலுத்துபவர்களின் பணம் மிகவும் பயனுள்ள முறையில் செலவிடப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக சீனாவுடனான போட்டியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU), சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) போன்ற அமைப்புகள் மூலம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த அவர்கள் கவனம் செலுத்துவர்.
இந்த வெளியேற்றப் பட்டியலில் கார்பன் இல்லாத எரிசக்தி ஒப்பந்தம், ஐநா பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு உள்ளிட்ட பல அமைப்புகள் அடங்கியுள்ளன.

இலங்கை சினிமா