BREAKING NEWS

ஆரையம்பதியில் இன நல்லுறவு இப்தார்: மதங்களை கடந்த ஒற்றுமைப் பெருவிழா!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
ஆரையம்பதியில் இன நல்லுறவு இப்தார்: மதங்களை கடந்த ஒற்றுமைப் பெருவிழா!

சமூகங்களுக்கிடையில் ஐக்கியம், சமாதானம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மண்முனைப்பற்று பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட இப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி நேற்று (12) சிறப்பாக நடைபெற்றது.

ஆரையம்பதி சிகரம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சி, எகெட் கரிட்டாஸ் (EHED Caritas) நிறுவனத்தின் அனுசரணையில் இன நல்லுறவை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மண்ணில் வாழும் பல்வேறு இன மற்றும் மதத்தவர்களிடையே ஒற்றுமைப் பாலத்தை உருவாக்குவதே இதன் பிரதான இலக்காகும்.

மண்முனைப்பற்று பல்சமய ஒன்றியத்தின் தலைவர் எம்.வை. ஆதம் (JP) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்:

அருட்தந்தை அன்டனி ஜெயராஜ் – இயக்குனர், எகெட் கரிட்டாஸ் நிறுவனம்.

அருட்தந்தை றூக் – மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர்.

உ. உதயகாந்த் – தலைவர், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைப் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் சமயப் பிரதிநிதிகள்.

இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து நோன்பு துறந்தமை, இப்பிரதேசத்தில் இன நல்லிணக்கத்திற்குச் சிறந்ததொரு முன்னுதாரணமாக அமைந்தது.