BREAKING NEWS

நிலக்கரி கொள்வனவில் பாரிய முறைகேடு எச்சரிக்கும் மரிக்கார்

PR
priya priya punidha in Latest Updates
Report
நிலக்கரி கொள்வனவில் பாரிய முறைகேடு எச்சரிக்கும் மரிக்கார்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியை விடவும் பாரிய ஊழல் ஒன்று தற்போதைய தரமற்ற நிலக்கரி கொள்வனவு டெண்டர் மூலம் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார். 

இன்று (29) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது, நிலக்கரி கொள்வனவுக்கான கேள்விப்பத்திர நடைமுறையில் ஆரம்பம் முதலே பாரிய முறைகேடுகள் நடந்துள்ளன. 

வழக்கமாக 42 நாட்கள் வழங்கப்பட வேண்டிய கால அவகாசம், தற்போது 21 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல தகுதியான நிறுவனங்கள் இதில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளன. 

முன்பு 5 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி இறக்குமதி செய்திருக்க வேண்டும் என்ற தகுதியும், 1 இலட்சம் மெட்ரிக் டொன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இது சிறிய நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டு, ஊழலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான 5,900 கிலோ கலோரி தரம் கொண்ட நிலக்கரி தற்போது கொண்டுவரப்படும் கப்பல்களில் இல்லை என்பது ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. 

அத்தோடு, தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி இயந்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். அத்துடன் 300 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக உற்பத்தி செய்ய முடியாமல் போவதால், மேலதிக மின்சாரத்தை அதிக விலைக்கு டீசல் மின் நிலையங்களிடமிருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், முதலாவது கப்பலில் வந்த நிலக்கரி தரமற்றது என நிரூபணமான பின்னரும், அதற்காக 2.1 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அந்த அபராதத் தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. 

தற்போது மூன்றாவது கப்பலும் வந்துள்ளது. அதன் தரம் முதலாவது கப்பலை விட மோசமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனை மறைக்கவே துறைமுகத்தில் கிரேன்களில் கோளாறு இருப்பதாகக் கூறி இறக்கும் பணிகளை அரசாங்கம் தாமதப்படுத்துகிறது. 

ஏதாவது இரண்டு கப்பல்களில் தரம் குறைவாக இருந்தால் அந்த ஒப்பந்தத்தையே இரத்து செய்ய வேண்டும். ஆனால், அரசாங்கம் அபராதம் விதிப்பதன் மூலம் அந்த நிறுவனத்தைப் பாதுகாக்கப் பார்ப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். 

மேலும், தொடர்ந்து தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தினால் மார்ச் மாதத்திற்குப் பிறகு நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு ரூபாய் கூட திருட மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மத்திய வங்கி மோசடியை விடப் பெரிய ஊழலில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த மோசடிகள் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் உரிய விசாரணைப் பிரிவினர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஊழலுக்குப் பெயர் போன ‘ஸ்பொட் டெண்டர்’ முறைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.