2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆட்டத்தின் வேகத்தைப் பராமரிக்கவும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.
போட்டித் தொடங்கும் போது நடுவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் 11 ஆடும் வீரர்கள் மற்றும் 5 மாற்று வீரர்கள் (Impact Players உட்பட மொத்தம் 16 பேர்) மட்டுமே மைதானத்திற்குள் நுழைய அனுமதி உண்டு. இவர்களைத் தவிர அணியில் உள்ள ஏனைய கூடுதல் வீரர்கள் எக்காரணம் கொண்டும் ஆடுகளத்திற்குள் வரக்கூடாது.
பட்டியலில் இல்லாத கூடுதல் வீரர்கள் மைதானத்தின் பவுண்டரி எல்லைக்கும், மின்னணு விளம்பர பலகைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் நடமாடவோ, அமர்ந்திருக்கவோ முடியாது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும்.
களத்தில் உள்ள வீரர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், பேட் (Bat) அல்லது பயிற்சியாளர்களின் தகவல்களைக் கொண்டு செல்லும் பணியை பட்டியலில் உள்ள 5 மாற்று வீரர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
விக்கெட் விழும் சமயத்திலோ அல்லது பவுண்டரி எல்லையிலோ மட்டுமே நேர விரயம் ஏற்படாத வகையில் குடிநீர் வழங்கப்பட வேண்டும். இதற்கு நடுவர்களின் முன் அனுமதி கட்டாயமாகும்.
இந்த புதிய விதியினால், அணியில் இடம்பெறாத அல்லது காயத்தினால் விளையாடாத நட்சத்திர வீரர்கள் மைதானத்திற்குள் வந்து இரசிகர்களை உற்சாகப்படுத்துவது இனி சாத்தியமில்லை. உதாரணமாக, சிஎஸ்கே அணியில் தோனி விளையாடாத பட்சத்தில், அவர் இடைவேளையின் போது ஆடுகளத்திற்குள் நுழைய இந்த விதி தடையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.