மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் மிரண்டு போயுள்ள நிலையில், மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது.
ப்ரேண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 25% க்கும் அதிகமாக எகிறி, ஒரு பீப்பாய் 119.50 டொலர் என்ற உச்சத்தைத் தொட்டது. இதனால் உலக நாடுகள் கடும் கவலையடைந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்குப் பிறகு விலை அதிரடியாக சரிந்து 90 டொலருக்கும் கீழ் வந்துள்ளது.
சிபிஎஸ் (CBS) ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் , “போர் ஏறக்குறைய முழுமையாக முடிந்துவிட்டது” என்று ட்ரம்ப் கூறியது சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்னதாக எண்ணெய் விலை உயர்வு குறித்த அச்சங்களை அவர் பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ‘ட்ரூத்’ சமூக வலைத்தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “ஈரான் அணுசக்தி அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் எண்ணெய் விலை மிக வேகமாக குறையும். அமெரிக்காவினதும் உலகினதும் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக நாம் செலுத்தும் மிகச் சிறிய விலை இது” எனத் தெரிவித்துள்ளார்.