மொனராகலை மாவட்டம் புத்தள – மஹாகொடயாய பகுதியில், பயிர்களைப் பாதுகாக்க வைக்கப்பட்ட சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நேற்று அதிகாலை குறித்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் உணவு தேடி நுழைந்த காட்டு யானை, அங்கு சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் சிக்கியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அந்த யானை சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தது.
உயிரிழந்த யானை சுமார் 7 அடி உயரமுடைய, நன்கு வளர்ந்த ஆண் யானை என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானையின் சடலத்தை மீட்ட பொலிஸார், மரண பரிசோதனைகளுக்காக வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சட்டவிரோத மின்சாரப் பொறியை அமைத்த குற்றச்சாட்டில், 40 வயதுடைய காணி உரிமையாளர் புத்தள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். காடுகளுக்கு அருகில் உள்ள விளைநிலங்களில் இது போன்ற ஆபத்தான மின் பொறிகளை வைக்க வேண்டாம் என வனவிலங்குத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.