இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, அல்லது இடையூறு செய்வதையோ, தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக எழுத்தாணை கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக, கம்பளை பிரதேச செயலாளர், நீதிமன்றச் செலவுக்காக ஒரு இலட்சம் ரூபாயை மனுதாரருக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஆம்பர் அட்வென்ச்சர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவுக்கான தீர்ப்பை வழங்கிய போதே, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

கம்பளை அம்புலுவாவ பிரதேசத்தில் கேபிள் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரச நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ள போதிலும், கம்பளை பிரதேச செயலாளர் அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களில், குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி முழுமையாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும், அதில் தலையிட கம்பளை பிரதேச செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டத்தரணி அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கம்பளை பிரதேச செயலாளர் ஏற்படுத்திய இடையூறுகள் காரணமாக குறித்த திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவு செய்துகொள்ள முடியவில்லை என்பதால், பிரதேச செயலாளர் இந்த செயற்பாடுகளில் அநாவசியமாகத் தலையிடுவதையும், இடையூறு செய்வதையும் தடுக்கும் ஆணை ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.