BREAKING NEWS

தரமற்ற நிலக்கரி இறக்குமதி: ரூ. 848 மில்லியன் இழப்பு; நாடாளுமன்றக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
தரமற்ற நிலக்கரி இறக்குமதி: ரூ. 848 மில்லியன் இழப்பு; நாடாளுமன்றக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை!

சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்கள் மூலம் இலங்கைக்கு ரூ. 848 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடு ஆணைக்குழு (PUC), உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் 12% கூடுதல் சாம்பல் அளவு காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எந்தவொரு கப்பலிலும் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை என குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டினார்.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமைக்காக இதுவரை எவ்வித அபராதமும் வசூலிக்கப்படவில்லை. இதுவரை மின்னஞ்சல் மூலம் நினைவூட்டல்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், உடனடியாக அபராதம் விதிக்க குழு பரிந்துரைத்துள்ளது.

தரமற்ற நிலக்கரியைத் தொடர்ந்து பயன்படுத்துவது நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகளைப் பாரிய அளவில் சேதப்படுத்தும் என எரிசக்தி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட உண்மையான நிதி இழப்பைக் கணக்கிட்டு மேலதிக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணையத்திற்கு நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது.