BREAKING NEWS

கொலம்பியாவில் இராணுவ விமானம் விபத்து: 66 வீரர்கள் உயிரிழப்பு; மீட்புப் பணிகளில் சிக்கல்!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
கொலம்பியாவில் இராணுவ விமானம் விபத்து: 66 வீரர்கள் உயிரிழப்பு; மீட்புப் பணிகளில் சிக்கல்!

கொலம்பியாவில் நேற்று (23) இராணுவ விமானம் ஒன்று ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட போது விபத்துக்குள்ளானதில், குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஹெர்குலிஸ் சி-130 (Hercules C-130) ரக போக்குவரத்து விமானத்தில் 11 விமானப்படை வீரர்கள், 115 இராணுவத்தினர் மற்றும் இரண்டு தேசிய பொலிஸ் அதிகாரிகள் என மொத்தம் 128 பேர் பயணித்ததாக ஆயுதப் படைகளின் தலைவர் ஹ்யூகோ அலெஜான்ட்ரோ லோபஸ் (Hugo Alejandro Lopez) உறுதிப்படுத்தியுள்ளார்.

பெரூ நாட்டின் எல்லையில் அமைந்துள்ள புவேர்ட்டோ லெகுய்சாமோ (Puerto Leguizamo) பகுதியில் இருந்து விமானம் மேலே எழும்பிய சில நிமிடங்களிலேயே இந்த அனர்த்தம் நேரிட்டதாகப் பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) குறிப்பிட்டுள்ளார்.

விபத்து நிகழ்ந்த அந்தத் தொலைதூரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களே முதன்முதலாக மீட்புப் பணிகளில் களமிறங்கியுள்ளனர். காயமடைந்த வீரர்களைப் பொதுமக்கள் தமது மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி விரைந்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பின்னர் இராணுவ வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும், அந்த நிலப்பரப்பு கரடுமுரடாக இருந்தமையால் மீட்புப் பணிகளைத் தொடர்வதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.