பெருந்தோட்ட சமூகங்கள் வசிக்கும் வீடுகளில் மின்சாரம் பெறுதல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இவ்வாணைக்குழு, மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்தும் பிரதான நிறுவனமாகவும், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் வகிக்கிறது. அதனுடன், மின்சாரச் சட்டத்தின் அடிப்படையில் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தரங்களை உருவாக்கி செயல்படுத்தும் அதிகாரமும் ஆணைக்குழுவிடம் உள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க ஆணைக்குழு எதிர்பார்க்கிறது. இதற்காக, பிரச்சினைகள் காணப்படும் பெருந்தோட்ட பிரதேசங்களில் உண்மை நிலவரங்களை கண்டறியும் நோக்குடன், பெருந்தோட்ட சமூகங்களுடனும் தோட்ட முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள கீழ்மட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.
தோட்ட முகாமைத்துவம் பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை மற்றும் பிராந்திய பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு, தாழ், மத்திய மற்றும் தென் பகுதிகளில் அமைந்துள்ள தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் தோட்டங்களை உள்ளடக்கிய மாதிரி சமூகங்களைத் தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் அரசுக்குச் சொந்தமான (JBDB/SLPC) மற்றும் தனியார் நிறுவனங்களின் கீழ் இயங்கும் தோட்டங்கள் அடங்கும். மேலும், பெண்கள் மற்றும் ஆண்களின் சம பங்களிப்பு, இலாபகரமான மற்றும் நஷ்டம் ஈட்டும் தோட்ட நிறுவனங்கள் என்பனவும் தேர்வு அளவுகோல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்விற்காக மாதிரி சமூகங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு பெருந்தோட்ட பிரிவுகளின் செயற்பாட்டாளர்கள், சமூக மற்றும் தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் ஆதரவை ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.
இதற்காக, https://forms.gle/9PEWLKaXt64vFu4m7
என்ற இணைய முகவரியில் உள்ள கூகுள் படிவத்தை நிரப்பி தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு திரு. சாந்த ஜயசிங்க அவர்களை 077 230 4135 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.