BREAKING NEWS

தம்புள்ளை குளிர்சாதனக் களஞ்சியப் பணிகள் 8 வாரங்களில் நிறைவு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
தம்புள்ளை குளிர்சாதனக் களஞ்சியப் பணிகள் 8 வாரங்களில் நிறைவு!

தம்புள்ளை விவசாய குளிர்சாதனக் களஞ்சியத் தொகுதியின் எஞ்சியுள்ள பணிகளை எதிர்வரும் 6 முதல் 8 வாரங்களுக்குள் முழுமையாக நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க ஒப்பந்ததாரர்களுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலயப் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலந்திரராஜா மற்றும் மத்திய பொறியியல் கலந்தாய்வு பணியகத்தின் (CECB) உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கட்டட நிர்மாணப் பணிகள் 99% நிறைவடைந்துள்ள போதிலும், குளிர்சாதனக் கட்டமைப்பில் (Cooling System) ஏற்பட்டுள்ள கோளாறுகளே இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதைத் தடுத்துள்ளன. “பொதுப்பணமும், இந்திய மானியமும் செலவிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஒரு வருடம் கடந்தும் இன்னும் முடங்கிக் கிடப்பதை அனுமதிக்க முடியாது. முழு நாடும் இதனை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது,” என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய தீர்மானங்கள்:

பழுதடைந்துள்ள குளிர்சாதன இயந்திரங்களை உடனடியாக மாற்றுவதற்கும், மின்சாரக் கோளாறுகளைச் சீர்செய்வதற்கும் ஒப்பந்ததாரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 4 வாரங்களுக்குள் முதற்கட்ட பராமரிப்புப் பணிகளை முடிக்கவும், மொத்தமாக 8 வாரங்களுக்குள் முழுத் திட்டத்தையும் கையளிக்கவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

உபகரணங்களைப் பாதுகாக்கும் வகையில் ‘வோல்டேஜ் ஸ்டெபிலைசர்கள்’ (Voltage Stabilizers) பொருத்தப்படுவதை உறுதி செய்யுமாறு இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகளின் விளைச்சலைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.