மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக இலங்கையின் ஏற்றுமதித் துறை எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள இந்தப் போர்ச் சூழலால் ஏற்றுமதி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதும், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் மற்றும் அரச – தனியார் ஒத்துழைப்புகளைக் கண்டறிவதுமே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.
தேயிலை சபை, மீன்பிடித் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களும், உணவு பதப்படுத்துபவர்கள் சங்கம், வாசனைத்திரவிய உற்பத்தியாளர்கள் சங்கம், பழங்கள் மற்றும் மரக்கறி ஏற்றுமதியாளர்கள் சங்கம் போன்ற தனியார் துறையினரும் இதில் பங்கேற்றனர். ஏற்றுமதித் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.
சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோகத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கப்பல் முகவர் சங்கங்கள் மற்றும் சரக்கு அனுப்புபவர்கள் சங்கங்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டன. சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தாண்டி, தடையின்றி ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள், விரைவில் நடைபெறவுள்ள ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சரவை (EDCM) கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான அதிகபட்ச ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.