BREAKING NEWS

எரிபொருள் QR க்கு போலி தளங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

PR
priya priya punidha in Latest Updates
Report
எரிபொருள் QR க்கு போலி தளங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் மூலம் மக்களின் தரவுகள் திருடப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது குறித்து மேலும் கூறுகையில்:


“வாகன உரிமையாளர்கள் மாறிய தரவுகளை நாம் முறைமையிலிருந்து நீக்கியுள்ளோம். அதேபோல், வாகனம் கைவசம் இருந்தும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கம் கைவசம் இல்லாத சுமார் 12 இலட்சம் தரவுகளையும் நீக்க வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு புதிய QR குறியீட்டைப் பெற முடியாது.


தற்போது வரை சுமார் 55 இலட்சம் பேர் QR குறியீட்டைப் பெற்றுள்ளனர். வாகனத்தை வைத்திருந்தும், பதிவு செய்த தொலைபேசி இலக்கம் இல்லாத உண்மையான உரிமையாளர்கள், நேற்று (18) இரவு முதல் தற்போது வைத்துள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உள்நுழைந்து வாகனத் தரவுகளை உள்ளிட முடியும். நாம் பழைய தரவுகளை மேலெழுதி (Overwrite) உங்கள் பெயருக்கு அதனை மாற்றித் தருவோம். இதன்போது நீங்கள் வாகனத்தின் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


யாராவது மற்றுமொருவரின் QR குறியீட்டை ரத்து செய்துவிட்டு அதனைத் தவறாகப் பயன்படுத்தினால், கணினி குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.


தற்போது மக்களின் தரவுகளையும் வாகனங்களின் செஸி (Chassis) இலக்கங்களையும் சேகரிப்பதற்காக ஐந்து அல்லது ஆறு போலி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்துள்ளோம். எனவே, இவ்வாறான இடங்களில் உங்களின் தரவுகளை வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகள் ஊடாகச் செல்லாமல், நீங்கள் நுழையும் இணையப் பக்கம் சரியானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”