மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அரசு விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்த “உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக்குழு”வின் அவசரக் கூட்டம் அமைச்சர்களான கே.டி. லால் காந்த மற்றும் வசந்த சமரசிங்க தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி மற்றும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், வெளிநாடுகளில் இருந்து உரம் மற்றும் விவசாய இரசாயனங்கள் இறக்குமதி செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
