ஈரான் மற்றும் அமெரிக்கத் தூதுக்குழுவினர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சந்தித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக (Brent) மசகு எண்ணெய்க்கான விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ஒரு பீப்பாய் எண்ணெய் 119 டொலர் என்ற உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழலால் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கத் தரத்திலான WTI எண்ணெய் விலை 2.1% சரிந்து 96.57 டொலராக பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக (Brent) மசகு எண்ணெய் விலை 95.20 டொலராகக் குறைந்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள நேரடிப் பேச்சுவார்த்தை மற்றும் தற்காலிகப் போர்நிறுத்தம் குறித்த செய்திகளே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். சில நாட்களுக்கு முன்பு வரை, ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் எண்ணெய் விலை 120 டொலரைத் தாண்டும் என வர்த்தகர்கள் அச்சமடைந்திருந்தனர்.
சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், இந்தியா போன்ற எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) அதிகம் நம்பியிருக்கும் நாடுகளில் விநியோகத் தட்டுப்பாட்டால் விலையேற்றம் நீடிக்கிறது. குறிப்பாக இந்தியச் சந்தையில் எண்ணெய் விலை 4% உயர்ந்து ஒரு பீப்பாய் 120 டொலர் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.