ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள், பொதுமக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளைச் சிதைத்துள்ளதாகத் தெஹ்ரான் அதிகாரிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் கலாசாரச் சின்னங்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ள ஈரான், சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் குடியிருப்புப் பகுதிகளைப் பாகுபாடின்றித் தாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் செம்பிறை சங்கத்தின் தலைவர் பிர் ஹொசைன் கோலிவண்ட், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், சிறுவர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மீதான தாக்குதல்களை பகிரங்கமாகக் கண்டிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மையங்கள் எந்தவிதமான இராணுவப் பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்கள், சுகாதாரத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
வடக்கு தெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனை அருகிலுள்ள பகுதியில் விழுந்த ஏவுகணையால், அங்குள்ள செயற்கை கருத்தரிப்பு (IVF) பிரிவு முழுமையாக அழிந்துள்ளது. இதனால், அங்கு சிகிச்சையில் இருந்த சிசுக்கள் மற்றும் கருமுட்டைகளை அவசரமாக வெளியேற்ற வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டதாக ஈரான் மருத்துவ பேரவை தெரிவித்துள்ளது.
அரசு தொலைக்காட்சியின் 2-ஆம் வரிசை அலைவரிசை அலுவலகம் மற்றும் தொடர்பாடல் கோபுரங்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் விளைவாகவே மருத்துவமனை சேதமடைந்ததாகவும் ‘அல் ஜசீரா’ ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.