ஹங்கேரியில் இன்னும் 30 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் விக்டர் ஓர்பனை (Viktor Orbán) பதவியில் இருந்து அகற்ற யுக்ரைன் எதையும் செய்யத் துணியும் என ஹங்கேரி அரசாங்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமர் ஓர்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நேரடி வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும், நாட்டின் முக்கிய எரிசக்தி நிலையங்களைச் சிதைக்க யுக்ரைன் திட்டமிட்டுள்ளதாகவும் ஹங்கேரி அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, ஹங்கேரிக்கு எண்ணெய் கொண்டு வரும் ‘துருஷ்பா’ (Druzhba) குழாய்ப்பாதை சீரமைப்புப் பணிகளை யுக்ரைன் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் கருத்துக்கணிப்புகளில் ஓர்பனின் ‘பிடெஸ்’ கட்சி, எதிர்க்கட்சியான ‘திசா’ (Tisza) கட்சியிடம் பின்தங்கியுள்ளது. இந்நிலையில், “எதிர்க்கட்சிக்கு வாக்களித்தால் ஹங்கேரியர்கள் யுக்ரைன் போருக்கு இழுக்கப்படுவார்கள்” என எச்சரிக்கும் வகையில் ஒரு AI (செயற்கை நுண்ணறிவு) காணொளியை ஆளுங்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் ஒரு தந்தை மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 90 பில்லியன் யூரோ நிதியுதவியை ஹங்கேரி தடுத்து வருவதால் ஆத்திரமடைந்துள்ள யுக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “யாராவது தடையாக இருந்தால், எங்கள் இராணுவம் அவர்களின் முகவரி தேடி வந்து பேசும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது நேரடியாக ஓர்பனையே குறிவைப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், ரஷ்யாவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஹங்கேரி எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரங்களை (Disinformation) மேற்கொண்டு வருவதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, போர் பயம் மற்றும் சர்வதேச சதி என ஹங்கேரி தேர்தல் இப்போது ஒரு போர்க்களமாகவே மாறியுள்ளது.