மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போரினால் உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, பல முக்கிய பெட்ரோகெமிக்கல் (petrochemical) தயாரிப்புகளுக்கு மத்திய அரசு ஜூன் 30 ஆம் திகதி வரை விலக்கு அளித்துள்ளது.
இந்த விலக்கு இன்று (2) முதல் அமுலுக்கு வருகிறது. அமோனியம் நைட்ரேட், மெத்தனால், ஸ்டைரீன், அசிட்டிக் அமிலம், பாலிவினைல் குளோரைடு (PVC) போன்ற பொருட்களின் இறக்குமதிக்கு இந்த விலக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே காலத்திற்கு அமோனியம் நைட்ரேட்டிற்கு விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியும் (Agriculture Infrastructure and Development Cess) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விலக்கு வழங்கப்பட்ட முக்கிய பொருட்கள்:
அன்ஹைட்ரஸ் அமோனியா, டோலுயீன், ஸ்டைரீன், டைக்குளோரோமெத்தேன், வினைல் குளோரைடு மோனோமர், மெத்தனால், ஐசோபுரோபைல் ஆல்கஹால், மோனோஎதிலீன் கிளைகால் (MEG), ஃபீனால், அசிட்டிக் அமிலம், வினைல் அசிட்டேட் மோனோமர், PTA, எதிலீன் டையமீன், டைஎத்தனோலமைன், அமோனியம் நைட்ரேட், பாலிமர்கள், போலிபிரொபிலீன், போலிஸ்டைரீன், ABS, PVC உள்ளிட்ட பல்வேறு பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகள் இதில் அடங்கும்.
பெட்ரோகெமிக்கல் பொருட்களை பயன்படுத்தும் மருந்து, பெயிண்ட், நெய்தல், பொம்மை போன்ற பல தொழில்கள், ஈரான் மோதலால் பாதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்ந்ததால் உற்பத்தி செலவுகளும் அதிகரித்துள்ளன.
குறைந்த விலை நிர்ணய ஆற்றல் கொண்ட சிறிய மற்றும் தொழிலாளர் சார்ந்த தொழில்கள் (உதா: நெய்தல் தொழில்) அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன; இதனால் வேலைவாய்ப்பு நிலைகளிலும் பாதிப்பு தென்படுகிறது.
உலகளாவிய பெட்ரோகெமிக்கல் விநியோகம் மீண்டும் சீராகும் வரை உற்பத்தி செலவுகள் குறைய வாய்ப்பு குறைவு. இது பெர்சியன் வளைகுடாவில் நிலவும் மோதல்கள் முடிவடைந்த பிறகே சாத்தியமாகும்.
பெட்ரோகெமிக்கல் பொருட்களின் விலை உயர்வு உடனடியாக தெரியாது; ஆனால் சில கால தாமதத்துடன் சந்தையில் வெளிப்படும். குறிப்பாக பொதுப் பொருட்களின் தொகுப்பு (packaging) விலை பின்னர் அதிகரிக்கும். இது மெதுவாக இருந்தாலும், காலப்போக்கில் அனைத்து நுகர்வோரையும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மக்களை பாதிக்கும்.