2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவுக்குச் சென்று விளையாட முடியாது என்ற தனது முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ள போதிலும், பங்களாதேஷ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணப் தொடரில், பங்களாதேஷ் அணி பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இடமாற்றம் செய்யுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், இந்தக் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.
இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவிற்குச் சென்று விளையாடப் போவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 200 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை புறக்கணிப்பது ஐசிசியின் தோல்வியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லவுள்ள நிலையில், எங்களைப் போன்ற ஒரு நாடு உலகக் கிண்ணத்தில் பங்கேற்க முடியாமல் போனால் அது கிரிக்கெட்டின் செல்வாக்கையே பாதிக்கும். அத்துடன், முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரம் உட்பட சமீபகாலமாக ஐசிசி எடுத்துள்ள முடிவுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மறுபுறம், பங்களாதேஷின் இந்த பிடிவாதமான போக்கிற்கு ஐசிசி கடுமையான பதிலடியை வழங்கியுள்ளது. போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு பங்களாதேஷிற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை பங்களாதேஷ், இந்தியா வர மறுத்தால் அவர்களுக்குப் பதிலாக வேறொரு அணியை இணைக்கப்போவதாகவும் ஐசிசி எச்சரித்துள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ்க்கு இடையிலான தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டே பங்களாதேஷ் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், ஐசிசி தனது முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், ஒரு பாரிய விளையாட்டு மற்றும் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.