அமெரிக்காவின் “நிபந்தனையற்ற சரணடைவு” கோரிக்கையை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) அடியோடு நிராகரித்துள்ளார். ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “எங்களை அடிபணிய வைக்க நினைப்பது அமெரிக்கர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு நிறைவேறாக் கனவு” என மிகக் கடுமையாகச் சாடினார்.
அதேவேளையில், அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதல்களுக்காக ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். படைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றக் குறைபாடுகளே (Communication gap) அந்தத் தவறுகளுக்குக் காரணம் என்றும், இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆனால், இந்த சமாதான அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று (07) காலை சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக துபாய் நகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயல்பட்டு எதிரிகளின் தாக்குதலை முறியடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் மன்னிப்புக்கும் கள நிலவரத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.