இலங்கைக் கடல் எல்லைக்கு அருகே ஈரானியக் கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவமானது, சர்வதேச கடல்சார் விதிமுறைகளை மீறும் சட்டவிரோதச் செயலாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதுடில்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026’ உலகளாவிய உரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
“விசாகப்பட்டினம் அருகே இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே ஈரானியக் கப்பல் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலால் இந்தச் சம்பவம் நேரிட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் 80 இற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈரானியக் கப்பலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கையைக் கேட்டுக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை நான் கண்டிக்கின்றேன். இலங்கை தனது தேசிய நலன்களின் அடிப்படையில் சுயமாக முடிவெடுக்கும் உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் இந்தியா முதன்மையான பங்கை வகிக்க வேண்டும். இதற்காகக் ‘கொழும்பு பாதுகாப்பு மகாநாடு’ போன்ற பிராந்தியக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன், கடல்சார் விழிப்புணர்வு முன்முயற்சிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் கொந்தளிப்புகளில் வெளிச்சக்திகளின் தலையீடு இருந்தது. அந்த நெருக்கடியுடன் தொடர்புபடுத்தி எனது குடும்பத்தின் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை நான் அடியோடு மறுக்கின்றேன்.” – என்றார்.