ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி முடிவுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும், இந்த போர் நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது எனவும், அங்கு தாக்குதல்கள் தொடரும் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இன்று (08) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலைத் தணிக்கும் முயற்சியாக, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த இரண்டு வார கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது. இதற்கு இஸ்ரேல் விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள் :
•ஈரான் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையை திறந்துவிட வேண்டும்.
•அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அமெரிக்கா – ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தொடங்கவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஈரானுடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும், லெபனானில் இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. அங்கு இதுவரை 1,500 பேர் பலியாகியுள்ளதுடன், 12 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை முற்றாக ஒழிப்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரே இலக்கைக் கொண்டுள்ளதாகவும் நெதன்யாகுவின் அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.