ஆப்கானிஸ்தான் வைத்தியசாலை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி எனத் தகவல்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு வைத்தியசாலை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மாத இறுதியில் தொடங்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் உச்சகட்டமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எல்லை தாண்டிய மோதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பொதுமக்களின் வாழ்விடங்களையோ அல்லது பொதுத் தளங்களையோ இலக்கு வைக்கவில்லை என்று கூறி பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் தனது ‘X’ தளத்தில், “உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணியளவில் காபூலில் உள்ள வைத்தியசாலை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. 2,000 படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலையின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 400-ஐ எட்டியுள்ளதுடன், சுமார் 250 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
காபூலின் முக்கியப் பகுதிகளான ஷார்-இ-நாவ் மற்றும் வஜீர் அக்பர் கான் ஆகிய இடங்களில் இரவு நேரத்தில் மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலிருந்து கரும்புகை வெளியேறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாலிபான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இது குறித்துக் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஒருமுறை ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையில் இருந்த நோயாளிகள். இச்செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அனைத்துலகக் கொள்கைகளுக்கும் எதிரானது மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றச்செயலாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பாகிஸ்தான் தகவல் அமைச்சகம், தங்களது தாக்குதல்கள் காபூல் மற்றும் நங்கர்ஹார் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகளை மட்டுமே இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகக் கூறி, இந்தத் தாக்குதல்களைப் பாகிஸ்தான் நியாயப்படுத்தியுள்ளது.
இதனிடையே, மறுவாழ்வு வைத்தியசாலை கடுமையாகச் சேதமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.