BREAKING NEWS

கொத்தலாவல பல்கலைக்கழக மாணவர்கள் விபத்து: முழுமையான விசாரணை கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவு

PR
priya priya punidha in Latest Updates
Report
கொத்தலாவல பல்கலைக்கழக மாணவர்கள் விபத்து: முழுமையான விசாரணை கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவு

பதுளை பகுதியில் கல்விச் சுற்றுலா சென்றிருந்த போது இடம்பெற்ற விபத்தில் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, ஜூலை 15 அன்று பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான மித்ர வாஹலவத்த என்பவரின் தந்தை இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி, பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை மாணவர்கள் பதுளைக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, இரவு 7:45 மணியளவில் துன்ஹிந்த பகுதியில் அவர்களது பேருந்து விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளான பேருந்தில் பல தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும், சாரதியிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இருக்கவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விபத்துக்குப் பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

இந்தச் சம்பவத்தின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

இந்த மனு நீதியரசர்களான ஜனக் டி சில்வா, சோஹித ராஜகருணா மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.