“மீனவ மக்களின் உரிமைகள் ஒருபோதும் மீறப்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், நிலப்பரப்பையும் கடற்கரையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்படுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மீனவர்கள் தங்களது தொழிலைச் செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நிரந்தரமான தீர்வொன்றை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை உரிய ஆய்வுக்குப் பிறகு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அனர்த்த நிலைமை காரணமாக மன்னார் மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது சுமார் 12,000 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.
வெள்ளத்தில் பாதிக்கப்படாவிட்டாலும், மோசமான வானிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்த மீனவக் குடும்பங்களுக்கு ஒரு வார காலத்திற்கான உலர் உணவுப் பொட்டலங்களை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், சீன அரசாங்கத்திடமிருந்து நாட்டுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள வலை உபகரணங்களின் தொகுதியை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்குவது தொடர்பாக சீனத் தூதரகத்துடன் கலந்துரையாடவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு யோத வெவ (Yodha Wewa) நீரேந்துப் பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் காணியைக் கைப்பற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், குளத்தின் எல்லைகளில் கற்களை இடுவதற்கு இடையூறு செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அனர்த்த நிலைமை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 70 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பது மற்றும் அதற்குத் தேவையான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்காக ஒரு குழுவை நியமித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குறித்த காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மன்னார் பொது வைத்தியசாலை உட்பட வைத்தியசாலைகளின் வசதிகளை விரிவுபடுத்துதல், சுகாதார சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்புதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு திறைசேரியினால் வழங்கப்படும் 15,000 ரூபாவை கிராம சேவை உத்தியோகத்தர்களின் சிபாரிசுக்கு அமைய பிரதேச செயலாளர்கள் ஊடாக விரைவாக வழங்கி முடிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களைக் கட்டுதல், நீர் விநியோகம் மற்றும் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருதல், நீர்ப்பாசனப் புனரமைப்பு, விவசாயம், கால்நடைத் துறையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்டஈடு வழங்குவதன் மூலம் அப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பின்னணியை அமைத்துக் கொடுப்பது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் மற்றும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன், ரி. ரவிஹரன், சத்யலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாட் பதியுதீன் உட்பட ஆளும் மற்றும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் டி. முருகேசன், மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.“