BREAKING NEWS

புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் சுற்றிவளைப்பு: மொரட்டுவ கொலைக்குழு சிக்கியது.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் சுற்றிவளைப்பு: மொரட்டுவ கொலைக்குழு சிக்கியது.

மொரட்டுவ – வில்லோரவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர்கள் மூவர் கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர் சுரேஷ் தமிந்த பெர்னாண்டோ என்ற இளைஞராவார். மிகவும் சோகமான விடயம் என்னவென்றால், படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் இன்று தனது திருமணத்தை நடத்தவிருந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒருபுறம் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்க வேண்டிய நிலையில், மறுபுறம் அவர் சடலமாக மீட்கப்பட்டமை அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ‘குடு ஷம்மி’, ‘டுடூ’ மற்றும் ‘ஹங்ச’ என்ற புனைப்பெயர்களைக் கொண்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவத்தின் பின்னர் இவர்கள் பொலன்னறுவைக்குத் தப்பிச் செல்வதற்காகப் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் காத்திருந்த போதே, கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினரால் மிகச் சாதுரியமாக சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதான சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.